‘டீ’ கடை முதல் ‘டீவி’ சேனல் வரை ‘பாரத்’ – கோவை அரசியல் பிரபலங்களின் கருத்து

இந்தியா என்ற பெயர்  ‘பாரத்’ என மாற்றப்படும் என்பது தான் தற்போதைய ‘ஹாட் டாபிக்’

சென்ற வாரம் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். அதற்கான அழைப்பிதழில் ‛பிரசிடெண்ட் ஆஃப் இந்தியா’ என்பதற்கு பதிலாக ‛பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என  போடப்பட்டிருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கையின் முன்பு ‛பாரத்’ என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் அதிகம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தலைவர்களின் அருகே அவர்களின் நாட்டின் பெயர் குறித்த பலகை தான் இருக்கும். இந்நிலையில் ஜி20 மாநாட்டில் ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டது அதீத கவனம் பெற்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் எனும் பெயர் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. அதோடு, நாட்டின் பெயரை இந்தியா எனவும், பாரத் எனவும் அழைக்கலாம் என உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்திருந்தது. தற்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் பெயர் மாற்றம் குறித்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ஶ்ரீ நிதி பிரேம் கூறுகையில், ‘வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை திசை திருப்புவதற்காகவே பாஜக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆர்ட்டிகிள் 1-ல் “இந்தியா தட் இஸ் பாரத்” என உள்ளது. அதனை “பாரத் தட் இஸ் ஹிந்துஸ்தான்” என மாற்ற வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கடந்த 2014-ல் முயற்சி செய்தார். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்ற பெயரில் பல திட்டங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்த நிலையில், இந்த பெயர் மாற்றக் கொள்கையை பாஜக கையில் எடுத்திருக்கிறது’ எனக் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொது செயலாளர் ராமகிருட்டிணன் கூறுகையில், “நம் நாட்டை  வர்ணாசிரம தர்ம நாடாக மாற்ற நினைக்கும் பாஜக-வின் முதல் திட்டம் இந்த பெயர் மாற்றம். இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர்கள் வைத்தார்கள் என்பதற்காக பாஜக அப்பெயரை வெறுக்கிறது என்றால் ஹிந்து என ஆங்கிலேயர்கள்தான் குறிப்பிட்டார்கள். இந்தியா என அழைத்தாலும், பாரதம் என அழைத்தாலும் அல்லது வெங்காயம் என அழைத்தாலும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்றார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், “தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட  பாடல்களில் பாரதம் என்ற சொல் உள்ளது. மகாகவி பாரதியும் தனது பாடல்களில் பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், பாரதம் எனப் பெயர்மாற்றம் செய்வதில் எந்த தவறும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ‘பாரத்’ என்ற பெயரில் பொதுவாக அழைத்திருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்!