சச்சிதானந்த பள்ளியில் புத்தகத் திருவிழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியையை டாக்டர் ரூபாகுணசீலான் கலந்து கொண்டு, புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நடத்திய ‘கவிதை எழுதுவது எப்படி?’ பயிலரங்கில் மாணவ மாணவியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பாகிய ‘கவிமலர்கள்-100’ நூல் வெளியீடு நடைபெற்றது. நூலினை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ரூபாகுணசீலன் வெளியிட, பள்ளிச் செயலர் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், ‘‘புத்தகங்கள் நமது உண்மையான நண்பன். தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நாம் நினைக்கின்ற புத்தகங்களையெல்லாம் இன்று மின் புத்தகங்களாக அலைபேசிகளிலே படிக்க முடிகின்ற, புத்தகத்தைக் கையிலெடுத்துப் படித்துக்கொண்டும், நம்முடனே அதனை வைத்துக்கொண்டும் இருப்பதில் சிறந்த மகிழ்ச்சியினைப் பெறமுடியும். ஒரு புத்தகத்தை முதல் முறையாகப் படிக்கின்றபோது மேலோட்டான செய்திகள் நமக்கு விளங்கும். இரண்டாவது முறையாகப் படிக்கின்றபோது ஓரளவிற்குப் புரியத் தொடங்கும். மீண்டும் படிக்கின்ற போது புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களோடு நமது கருத்துக்களும் இணைந்து புதுப்புதுச் சிந்தனைகள் உருவாகத் தொடங்கும். புத்தகத்தின் பக்கங்களை வைத்து அதனை மதிப்பிட்டுவிடக் கூடாது. குறைந்த பக்கங்களாக இருந்தாலும், உயர்ந்த சிந்தனைகளையும், அறக்கருத்துகளையும் கொண்டதாக இருக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது. மனவுறுதி, ஊக்கம், விடாமுயற்சி, செயலில் தெளிவு, மற்றவர்களையும் அரவணைத்துச் செல்கின்ற பண்பு, தலைமைப் பண்பு ஆகிய பல நற்பண்புகளைப் பெறவும், வளர்த்துக்கொள்ளவும் புத்தகங்களே வழிகாட்டிகளாக விளங்குகின்றன. பள்ளிப்பருவத்திலுள்ள நீங்கள் அனைவரும், தினமும் புத்தகங்களைப் படிக்கின்ற வழக்கத்தை மேற்கொண்டு, உலகம் போற்றுகின்ற தலைவர்களாக உருவாக வேண்டும்.’’ என்று பேசினார்.

பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தனது தலைமையுரையில், ‘‘விடுமுறை நாட்களில் படித்து மகிழ்வதற்காகத்தான் நம் பள்ளியில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. மாணவ மாணவியர் ஒவ்வொருவரும், புத்தகங்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். படிக்கின்ற பழக்கம் உங்களுக்குள் தலைமைப் பண்புகளை வளர்க்கும்.  படிப்பது, புரிந்துகொள்வது, படித்ததை நினைத்துப் பார்ப்பது, படித்தவற்றிலுள்ள உட்பொருளைப் பற்றிய தெளிவு பெறுவது,  படித்துத் தெளிந்ததை வாழ்வில் கடைப்பிடித்து உயர்வது என்பவை புத்தகங்களைப் படிக்கின்ற படிநிலைகள்.  மாணவ மாணவியர், படிக்கின்ற புத்தகங்களை முழுமையாகவும் ஆழமாகவும் படிக்கின்ற பழக்கத்தை வளர்க்கின்ற வகையில்தான் நம் பள்ளியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறோம். இன்று தொடங்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் உங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பயன்பெறுங்கள். நம் பள்ளித் தமிழாசிரியர் கார்த்திகேயன் ‘கவிமலர்கள்-100’ என்ற தலைப்பில் மாணவ மாணவியர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ்த்துறைக்கும் கவிதைகள் எழுதிய மாணவ மாணவியருக்கும் பாராட்டுக்கள். ’’ என்று பேசினார்.

ஏப்ரல் 10, 11, 12 ஆகிய  மூன்று நாட்கள் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவில், விஜயா பதிப்பகம், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், அதிதி புக்ஸ், ரெட் புக்ஸ், ராமகிருஷ்ணா பதிப்பகம், சில்ட்ரென் புக் ஹவுஸ் மற்றும் ஸ்கொலாஸ்டிக் ஆகிய புத்தக பதிப்பகங்கள் மற்றும் நிறுவனங்கள் பங்குபெற்றுள்ளன.

முன்னதாகப் பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர்.வெ. கணேசன் வரவேற்றார். விழாவில், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.