பெர்டானா பல்கலைக்கழகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மலேசியா நாட்டில் கோலாலம்பூர் நகரில் உள்ள பெர்டானா பல்கலைக்கழகத்துடன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமியின் வழிகாட்டுதல்படி, கோவை நவ இந்தியாவில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

பெர்டானா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணை வேந்தர் முஹமது ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், “இவ்விரு கல்வி நிறுவனங்களின் ஒருமித்த விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்களிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள், ஆராய்ச்சியில் ஈடுபடுதல் ஆகிய களங்களில் மாணவர் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், கல்வி செயல்பாடுகளில் இணைந்து செயல்படவும், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன” என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பெர்டானா பல்கலைக்கழகப் பதிவாளர் ஷெலினா அப்துல் ரஹ்மான், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி நிதியியல் துறைத்தலைவர் ஜி.அகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.