தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் கருவிகள், தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து வேளாண் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் செயல்விளக்க விழாவினை நடத்தியது. இதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துவக்கி வைத்தார்.

டிராக்டரால் இயங்கும் செவ்வக வடிவ பாத்தி அமைக்கும் இயந்திரம், கரும்புக்கரணை நடவு இயந்திரம், மக்காச்சோளக்கருது அறுவடை இயந்திரம், காய்கறி விதைகளை விதைக்கும் இயந்திரம், ட்ரோன் தெளிப்பான், தென்னைமரம் ஏறும் கருவி, பருப்பு உடைக்கும் இயந்திரம், தக்காளி/கத்தரி விதை நீக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைக்கும் இயந்திரம், சூரிய உலர்த்திகள், வெப்ப எரிவாயு/உயிரிக்கரிம உற்பத்திக்கலன்கள், காற்று உந்துவிசை அடுப்பு, தென்னைக்கு வட்ட அகழி நீர்ப்பாசனம், உரப்பாசனம், பசுமைக்குடிலில் காற்றோட்ட அமைப்பு, சொட்டு நீர்ப்பாசனத்தில் காற்று கலந்த பாசனம், நெகிழி நிலப்போர்வை மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவுரூட்டல் ஆகியவற்றின் செயல்விளக்கம் உழவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் ரவிராஜ், பண்ணைக்கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகைச் சேவை மையங்களை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வேலைகளை காலத்தே செய்து முடித்து பயன்பெற அறிவுறுத்தினார்.

வேளாண் விரிவாக்க கல்வி இயக்கத்தின் இயக்குநர், முருகன், சிறிய அளவிலான பண்ணைக்கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்களை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தார்.

பயிர் மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் கலாராணி, நெல் சாகுபடியில் உள்ள இயந்திரமயமாக்கல் குறித்து பேசுகையில், விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெரிய அளவிலான பண்ணைக் கருவிகளை வாங்கி வாடகைக்கு தருவதன் மூலம் சிறு குறு விவசாயிகள் பலனடைய முடியுமெனக் கூறினார்.

வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்திய முதல் ஐந்து விவசாயிகளுக்கு பயனீட்டாளர் விருது வழங்கப்பட்டது.