கொங்குச்சீமை செங்காற்று – 12

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

அண்ணிக ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்குறாங்க…!

ஊருக்கு வடகிழக்கில் இருந்த சின்னக்குளம் குனியமுத்தூரின் குறுக்குப் பாதையை ஒட்டி ஏரிகளின் மீது கருவேலாமரங்களைச் சுமந்தபடி உள்ளது. சுண்டக்காமுத்தூர் குளம் நிரம்பி விட்டால் வாய்க்கால் நீரை இந்தக் குளத்துக்குத் திருப்பி விடுவது வழக்கத்தில் இருந்தது.

மின்னத்த காலத்துல குடிதண்ணிக்கே இந்தக் கொளத்துக்குத் தான் போகணுமாம்! தண்ணி வத்தாமக் கெடக்கும்னும் அதைய வெச்சுத்தான் இந்த ஊருக்கு கொளத்துப்பாளையம்னு பேருங்கூட அமஞ்சிதுன்னும் பெரியவிக சொல்லியிருக்காங்க.”

கதர் வேட்டியய்யன் இந்த ஊர் பெருகி வளர்ந்ததைப் பற்றிச் சொல்வதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஊரில் குரும்பக்கவுடர்களே அதிகம் வசித்ததோடு விவசாயத்தையும், ஆட்டுப் பட்டியையும் பிரதானமாகக் கருதி வந்தனர். வேளாண்மை விளைச்சலும் நாளடைவில் குறைந்து போகவே இதிலிருந்து இவர்களும் விலகிக் கொள்ளலாயினர்.

ஆடு மேய்க்கும் பிழைப்பும், படிப்படியாக இப்படித் தான் இவர்களுக்கு அந்நியமாகியது. இன்னமும் விடாப்பிடியாக அந்தத் தொழிலைக் கைவிடாமல் இருப்பவர்களில் மாசய்யனின் குடும்பம் குறிப்பாக அறியப்பட்டிருந்தது.

பனைமட்டையால் வேய்ந்த ஆமைச்சாளை, மூங்கில் கொடாப்புகள், பட்டியைச் சுற்றிலும் அடைக்கப் பயன்படும் ஆளுயரத் தட்டிப் படல்கள் என அதற்கு வேண்டிய சகல மராமத்துச் சாமான்களையும் வைத்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய ஒன்றாக இந்தத் தொழில் இருந்தது.

சுறுசுறுபுள்ள ஆள்காரர் ரெண்டு பேரும்,திண்டி குறையாத நாய்கள் ரெண்டும் வேண்டியிருந்தது. இத்தனையும் இருந்தால் மட்டும் போதுமென்று ஆகிவிடாது. ஆடுகளின் பேரிலும், அவைகளுடைய நலத்தின் பேரிலும் வெகுவாக நாட்டம் இருந்தாக வேண்டியது முக்கியம். ஆடுகளின் நடையையும், மேய்ச்சலில் கொள்கிற ஈடுபாட்டையும் வைத்தே ‘இந்த நெலவரத்துல ஆடு இருக்குது’என்பதை அனுமானித்து விடக் கூடிய அனுபவம் கண்களில் குவிந்திருக்க வேண்டும்.

இத்தனையும் மாசய்யனிடமிருந்து இந்தச் சுப்பையனுக்குக் கிடைக்கப் பெற்றிருந்தது. ‘காடா மேடாக் கஷ்டப்பட்டவனுக்குப் பாவம் கல்யாணத்துக்கும் பொறகாச்சும் நிம்மதி கெடைக்கட்டும்’ என ஏகமாகப் பலரும் வாழ்த்தியதற்கேற்ப அவனின் கல்யாணம் எளிமையாக நடைபெற்று முடிந்தது.

“குடும்பஸ்தன் ஆன பிற்பாடுனாலும் ஓய்வா இருப்பீனு நெனைச்சா உனக்கென்னமோ காடுகரையவே மறக்க முடியலையாட்டம் இருக்குதே..” சக வயதுக்காரர்கள் சகஜமாகத் தங்களின் செல்லச் சீண்டல்களை வெளிப்படுத்தினர்.

“…அதுக்கொசரம்… பொழப்புத் தனத்தெ வுட்டுற முடியுமா? சொந்த பந்தங்களுக்குக் கண்ணாலத்து விருந்து போட்டோமுங்கிறதுக்காக வூடு மாத்தி வூடு பொண்ணையும், மாப்புளெயையும் விருந்துக்குக் கூப்புட்டுட்டு போயிட்டிருந்தா அப்புறம் ஆடுக முச்சூடும் பட்டினியல்ல கெடக்கோணும்…” என்று தன் ‘கருக்கடையைக் கபடு சூதில்லாமல் அவன் சொன்னதைக் கேட்டு புதுப்பொண்ணான கண்ணாத்தாளுக்குப் புளகாங்கிதமாகத்தான் இருந்தது.

“சுப்பையன் வெள்ளைச் சோளம் கண்ணு! அவனுக்கு உனிமே எல்லாமே நீதான்! பசியறிஞ்சு சோறு மட்டுமல்ல. பாசமறிஞ்சு அவனுக்கு வேணுங்கிறதை ஊட்ட வேண்டியதும் நீதாங்கண்ணு” மாமியார் சொன்னது அவளின் அடிமனதில் பத்திரமாக இறங்கிக் கொள்ளவே செய்தது.

கதர்வேட்டி அய்யன் அவளுக்குப் பெரிய அப்பிச்சி முறை ஆகிறது..”பழைய சொந்தம் வுட்டுப் போகாம இருக்க வேணுங்கிறதுக்குத்தா எம்மட பேத்தியும் இந்த ஊருக்கே வந்து சேர்ந்திருக்கிறா…” என்றவாறு மெதுவாக நடந்து வந்து திண்ணையில் உட்கார்ந்து பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் வெற்றிலை பாக்குடன் பணம் வைத்துக் கொடுத்து “ரெண்டு பேரும் சேமமா….தீர்க்காயுசா வாழோணும்” என ஆசீர்வதித்துவிட்டுப் போனார்.

சேந்து கிணத்து வீட்டுப் பொன்னுத்தாயிகூட குச்சியை ஊன்றிக்கொண்டு கொள்ளுப் பேரனின் கையைப் பிடித்தபடி தெற்கு வீதிக்கு வந்தாள்.

“ஆத்தா தெக்குமின்னெ வந்து வெகுநாளாவிப் போச்சில்ல” என எதிர்பட்டவர்கள் “நெதானமாப் பாத்துக் கூட்டிட்டுப் போ சாமி..” என்று நின்று சொல்லிவிட்டு போனார்கள்.

“தாரா மூர்த்தத்துக்கே இங்கெ பக்கம் பாடுன்னா இவிகளையெல்லாம் கூட்டிட்டுப் போயிருக்கலாம்” என மாசய்யனுக்கு அபிப்ராயம் கூட உண்டானது.

கைகளில் சதாநடுக்கம் இருந்து கொண்டேயிருக்கும்படி பொன்னுத்தாயின் திரேகம் முதிர்ச்சி கண்டிருந்தது. பொடுபொடுவெனப் பார்த்தபடி பாசத்தோடு பக்கத்தில் கூப்பிட்டு எவரொருவரையும் உட்காரவைத்துக் கொண்டு இப்பவும் கூட அடையாளம் சொல்லி விசாரிக்கும் குணம் அவளுக்கு நிறைய இருந்தது. முருகம்மா வகையில் சொந்தக்காரிதான் பொன்னுத்தாயி.

“ஆதி மொதல்ல இவிக பட்டியிலதா ஆடுக அதிகமாக இருந்துச்சு. அய்யனிருந்தப்ப செம்மறியாட்டு ரோமத்துல கம்பளிகளும் நெசவு பண்ணி யேவாரம் செஞ்சாங்க! அதைப்போல கம்பளிக இப்ப கோயம்முத்தூர்ல கடைகடையாச் சுத்தினாலும் வாங்க முடியாது. ஒத்தை மடிப்புக் கம்பளின்னும், ரெட்டை மடிப்புக் கம்பளின்னும் பாங்கா வெச்சிருந்தாக்க ஒரு தலைமுறைக்கும் அசராது இப்பவும் கூட இந்த ஊருக்குள்ளே சுத்திப்பாத்தா ஆராச்சும் வெச்சிருப்பாங்க! இப்பவெல்லா அப்பியாப்பட்ட கம்பளி நெய்யிறதக்கு ஆளுக இல்லெ!

பெய்யிற மழையிலயும் அதைய தலைக்குக் கொங்காடை போட்டாப்பிடி போர்த்திட்டு நின்னுட்டா ஒரு சொட்டு தண்ணி கூட ஒடம்புல படாது. மழை நின்னதுக்குப் பிற்பாடு கம்பளியெ நல்லா ஓதறிப்போட்டு மறுக்காவும் போர்த்திக்கலாம். அடுப்புக்கிட்ட உக்காந்தா இருக்குமே வெதுவெதுப்பு அப்பிடியிருக்கும் ஒடம்புக்கு! கம்பளின்னா அதுதா கம்பிளி. ஆடு மேய்க்கப் போறவிகளுக்கு பாதிபலத்தை அது குடுக்கும். ஒரு ஆள் தொணை எப்பவும் கூடவே இருந்தாப்லெயினு சொல்லுலாம்! அழுக்குப் புடிச்சாலும் தெரியாது. சிட்டாளுகெல்லாம் அதைய தூக்கவே முடியாது…ம்…! அய்யன் காலமானதுக்குப் பொறகு ஆடுகளே எல்லாம் வித்துப் போட்டாங்க…! கம்பளி பின்னுற வேலைய இந்த ஆத்தாவிகளும் அப்பறம் செய்யிலே…”

பலப்பல நினைவுகள் பொன்னுத்தாயிவைப் பார்க்கும்போது ஏற்படும்.

வருகிற போகிற ஓரம்பறைகளை நமச்சிவாயமும் அவன் மனைவியும் சுணக்கமில்லாமல் நன்றாகவே உபசரித்தனர். ‘இந்த வீட்டுக்குத் தலை நாளைல வந்த மூத்த மருமக’ எனும் உரிமை தனக்குத்தானே பெரிதாக உண்டு என்னும்படி நாகரத்தினத்தின் நடைமுறையிருந்தது.

“உன்னோட யோகத்துல அடுத்த வருசத்துலயே சின்னக் கொழுந்தன் ராசுவுக்கும் கல்யாண காரியம் கைகூடி வருட்டும்” என அவளிடத்தில் இரண்டொருவர் சொல்லிச் சென்றனர்.

பச்சபாளித் தோட்டத்துக் கோனாரின் மனைவி மாப்பிள்ளையும் பொண்ணையும் பார்த்து மொய் வைத்துக் கொடுக்க வந்திருந்தாள். கூடவே சரோஜினியும் வந்திருந்ததோடு “உங்க அண்ணிக ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்குறாங்க” என செல்வராசுவிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கூடப் படித்த சிநேகிதி முறையோடு அவன் அவளிடத்தில் இப்படி பேசிக்கொண்டிருந்ததை நாகரத்தினமும் எதேச்சையாகக் கவனிக்க நேர்ந்தது.

அஞ்சல் வழிக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு விண்ணப்பிப்பது தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டு சென்றாள் அவள்.

(தொடரும்)