நிதி நெருக்கடியின் நடுவே சிறப்பான திட்டங்கள் -தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 11 பேர், சுயேட்சி வேட்பாளர்கள் 26 பேர் என மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்தவகையில், இந்தியா கூட்டணி கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (ஏப்ரல் 01,2024) மணியகாரம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட காந்திமாநகரில் பிரசாரத்தை துவக்கினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: ‘இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக நமது கோவை பாராளுமன்ற தொகுதி அமைந்திருக்கிறது. தி.மு.க., செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. பல இடர்பாடுகளுக்கு நடுவே நிதி நெருக்கடியின் நடுவே பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரே அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம். அதனால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக இன்றைக்கு தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

உங்களிடத்திலே வரக்கூடிய எதிரணி வேட்பாளர்கள் எதிரணி கட்சியினர் வருவார்கள், கடந்த 10 ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நமக்கு என்ன கொடுத்தது என்றால்? விலை உயர்வு, விலை ஏற்றத்தை தான் கொடுத்தது. கேஸ் விலை, பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. இப்படி இருக்க அவர்கள் ஏதோ நிறைய செய்தது போல உங்களிடத்திலே வந்து வாக்கு கேட்பார்கள். நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

இந்த பிரசாரத்தில், கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ். எம்.எல்.ஏ , மாநகராட்சி மேயர் கல்பனா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.