டாக்டர்.ஆர்.வி. கல்லூரியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம் – அறிக்கை

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில், வருகின்ற 4.2.2024 அன்று உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அண்மையில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பாக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரூபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் சமூக சேவகர் மற்றும் சுகாதார சேவை மையத்தின் துணை இயக்குநர் முரளிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், “புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் ஆர்வம் பெருகி வருகிறது. இதனால் இதயநோய், நுரையீரல் புற்று, கண் பார்வை குறைபாடு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், இளமையிலேயே முதுமையான தோற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொண்டு புகைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் காரமடையில் உள்ள மங்களக்கரை புதூரில் உள்ள மக்களுக்கு இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புகையிலை தடுப்பிற்கான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்தனர்.