ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்நுட்பப் போட்டிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.சி.ஏ. துறை சார்பில், ‘இன்டெசா-24’ என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டிகள், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றன.

இதன் தொடக்க விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பி.சி.ஏ. துறைத்தலைவர் ஹரிபிரசாத் தொழில்நுட்பப் போட்டிகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

நௌஸ் இன்போ சிஸ்டம்ஸ் மனிதவள மேலாளர் எத்திராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, ‘மாணவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது எப்படி? வேலைவாய்ப்புகள் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உருவாக்கிக் கொள்வதுடன், தங்களால் இயன்றதை இந்த சமுதாயத்திற்கும் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இடையே ஹெக்லர், கோடிகோ, இன்வென்சர்ஸ், ஃபன்பியூசன், ஃபால்பியூரி, ட்ரெஸோரோ, ஆப் கிராஃப்டர் போன்ற தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40 கல்லூரிகளைச் சேர்ந்த 696 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பி.சி.ஏ. துறை மாணவத் தலைவர் அபிஷேக் வரவேற்றுப் பேசினார். முடிவில் ஏ.நவீன்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பி.சி.ஏ. துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.