வி.எல்.பி. கல்லூரியில் கோவை விழா கொண்டாட்டம்  

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் யங் இந்தியன்ஸ் (ஒய்ஐ) சார்பாக, “கோவை விழா- 2024”  நடைபெற்றது.

விழாவில், கல்லூரி நிர்வாகத் தலைவர் சூரியகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர்  சதீஷ்குமார் தலைமை ஏற்றார்.

விழாவிற்கு கோவை காவல் துறைப் போக்குவரத்துத் துணை ஆணையர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில், கோவையின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்துப் பெருமையோடு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் தங்களது தனிப்பட்ட திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும், வாழ்வின் உயரத்தை அடையச் சமுதாயத்துடன் இணைந்து புதுமைகளை உருவாக்குங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

இதில் பாரம்பரியப் பொருட்களை விற்பனை செய்யும் ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களின் கலை மற்றும் ஓவியப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மெஹந்தி டிசைனிங், ஓவியம், தேங்காய் ஓட்டு கலை, ரீல்ஸ் மேக்கிங், விஎல்பி – இன் ஆர் ஜே, தனி நடனம், குழு நடனம் போன்ற பல நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. மாணவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

கோவையின் வாழ்க்கை முறையை விளக்கும் மௌன மொழி நாடகத்தை இலக்கிய மற்றும் நாடக மன்றம் வழங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.