அடர்ந்த பனிமூட்டத்தில் மறைந்தது தாஜ் மஹால் :  சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

வட இந்தியாவில் குளிர் அதிகரிப்பதால், ஆக்ராவில்  உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான தாஜ் மஹால் அடர்ந்த பனிமூட்டத்தில் மறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் .

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து இருப்பதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கே மிக பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், காற்று மாசுடன், ஏற்பட்ட பனி மூட்டத்தினால் பார்வைத்திறன் குறைந்து காணப்படுகிறது. இதனால்,  இந்தியாவின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலிற்கு அருகில் உள்ள ராயல் கேட் மற்றும் லேடி டயானா பெஞ்சில் இருந்து தாஜ்மஹாலின் அழகிய காட்சியைக் காண இயலாததால் சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்த அடர்ந்த பனிமூட்டத்தின் காரணமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும்,  வானிலைத் துறையின் கூற்றுப்படி, ஆக்ரா பகுதியில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் காலையிலும் மாலையிலும் அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  ஆக்ராவில் இன்று காற்றுத் தரக் குறியீடு (AQI) 132 அல்லது “மிதமான” பிரிவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.