குழந்தைகளின் உடல் உறுப்புகளை பாதிக்கும் ‘ஜங்க் புட்’

காலத்தின் சுழற்சியின் காரணமாகப் பாரம்பரிய உணவுகள் மீதான நாட்டம் குழந்தைகள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது என்றே செல்லாம். ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதற்கேற்ப துரித உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு வகையான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரிந்தும் பெற்றோர்களும் அதனைக் கட்டுப்படுத்த ஏனோ தவறிவிடுகின்றனர்.

கவனம் அது ‘தேவை’

துரித உணவுகளை எடுத்துக் கொள்ளும் பள்ளிக் குழந்தைகளிடம் உடல் ஆரோக்கியம் சார்ந்த சர்வே ஒன்று சமீபத்தில் ஹைதராபாத் நகரில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, செயல்படும் முன்னணி 5 பள்ளிகளில் நடத்தப்பட்ட சர்வே முடிவில் பல தகவல்கள் வெளியாகி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு `நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ்’ எனும் கல்லீரல் சார்ந்த நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. 1,100 குழந்தைகளில் 50 முதல் 60 சதவீதம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதில், எச்சரிக்கும் விஷயம் என்னவென்றால் 8 வயதுக் குழந்தைகளும் கல்லீரல் நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

சாக்லேட், சோடா, நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பதார்த்தங்கள் குழந்தைகள் உணவுப் பட்டியலில் பிரதான இடம் பிடித்திருக்கிறது. இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளின் கல்லீரல் நாளடைவில் வீக்கம் அடையும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகையால், குழந்தைகளில் உணவுப் பழக்க முறையில் பெற்றோர்கள், பெரியவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்வு நிறைவைத் தரும்.