பிக்கி புளோ அமைப்பின் சார்பில் “சாதனா” விருது வழங்கும் விழா

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி மகளிர் அமைப்பு  சாதனா விருது வழங்கும் விழா நடத்தியது.

விழாவில் பிக்கி புளோ அமைப்பின் கோவை மண்டல தலைவர் ரமா ராஜசேகர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்றுப் பேசினார்.

விழாவில் பல்வேறு தடைகளைத் தாண்டி, இலக்கை அடைந்த மகளிரைப் பாராட்டி விழாவில் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் தலைவராக ஜெயஸ்ரீ ரவி செயல்பட்டார். சாதனையாளர்களாக எஸ். சந்தியா, ஆர். தீபிகா ராணி, உமாமகேஸ்வரி, உமா ராஜேசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சின்னாம்பதி பழங்குடியின பெண்ணான எஸ். சந்தியா, போக்குவரத்து வசதியே இல்லாத நிலையில் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் எஸ்.என்.வி.சி., கல்லூரியில் பி.காம், சிஏ படித்தார். தற்போது, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பொது தேர்வாணையம் டிஎன்பிசி நடத்தும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

இரண்டாவது விருது பெற்ற  ஆர். தீபிகா ராணி – போலியாவால் பாதிக்கப்பட்டவர். குழந்தையிலேயே கை, கால்கள் போலியாவால் பாதிக்கப்பட்டது. தனது வலிமையான எண்ணத்தால், முடநீக்கியல் பயிற்சிகளை மேற்கொண்டு, மாற்றுத்திறன் விளையாட்டுப் போட்டிகளில் சக்கர நாற்காலியில் பங்கேற்றுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த 12வது தேசிய வீல்சேர் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் 2023ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் பல சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.

மூன்றாவதாக இயற்கை ஆர்வலரும், தொழில் முனைவோருமான உமா மகேஸ்வரி. அனன்யா ஷெல்டர்ஸ் (பி) நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநராக உள்ளார். முதியோருக்கான இல்லங்களை அமைத்து, இந்திய முதியோர் சமுதாயத்திற்கு வழிகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக விருது பெற்ற  உமா ராஜேசேகர், அவநீதா டெக்ஸ்டைல் நிறுவனம், அபிகரன் அக்ரோ அக்ரோ பார்ம்ஸ், ஆசியா பி லிமிடெட், லோட்டஸ் டிவிஎஸ், டெக்ஸ்வேலி ஈரோடு மற்றும் லோட்டஸ் ஹ_ண்டாய் நிர்வாக இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் 1200 பணியாளர்களில் 1000 பேர் பெண்கள். இவரது நிறுவனங்கள், மகளிர் முன்னேற்றத்துக்காக 5000 பெண்கள் பட்டம் பெற உதவி செய்துள்ளது. கியுப் நிறுவனத்தின் நிறுவனராகவும், பொருளாளராகவும் உள்ளார். கோவை நகர்ப்புற பகுதியில் பசுமையை உருவாக்க மரங்களைப் பாதுகாத்தல், செடிகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரது முயற்சியால் சிங்காநல்லூர் ஏரியை நகர்ப்புற உயிரின மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.