சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்க நிகழ்வாக, குழந்தை இயேசுவின் பிறப்பினைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், இயேசுவின் பிறப்பை உலகிற்கு அறிவிக்கும் நிகழ்வினை பள்ளி மாணவ மாணவியர் நிகழ்த்தினர். விழாவில், கோயம்புத்தூர் கங்கா சுகாதார அறிவியல் கழகத்தின் முதல்வர் மற்றும் டீன் டாக்டர். எஸ்தர் ஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

 

அவரின் வாழ்த்துரையில், ‘இறைவனின் கருணை நமக்குக் கிடைக்க நாம் அவரிடத்தில் சரணடைய வேண்டும். அருளையும் அறிவையும் பெற, படிக்கத் தொடங்கும் முன் இறைவனிடத்தில் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். நம்முடைய மனதைக் கோயில் போல வைத்துக்கொள்ள வேண்டும். மனம் பாழாக்குகின்ற எண்ணங்களிலிருந்து விலகி இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பள்ளிப்பருவத்திலிருந்தே விளையாட்டுக்கள் மற்றும் உடற்பயிற்சிகளைத் தவறாது மேற்கொண்டால் நமது ஹார்மோன்கள் தூண்டப்பட்டு உடல் உறுதியினையும் மன உறுதியினையும் மகிழ்ச்சியான வாழ்வையும் பெறலாம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்று பேசினார்.

விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றிய பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் பேசுகையில், ‘உன்னை நீ நேசி, உன்னருகிலிருப்பவரையும் நேசி, மறப்போம், முன்னேறுவோம் என்பதனை மனதில் கொண்டு நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நம் மனதில் நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் அதனால், நல்ல ஆற்றல் உருவாகும். தீய எண்ணங்கள் கொண்டிருந்தால் நம்மிடமிருந்து நல்ல ஆற்றல் குறைந்துகொண்டே போகும். எப்போதும் எல்லோரையும் மதிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தத் தவறக்கூடாது. மற்றவர்களின் துயரங்களை நீங்கள் துடைக்கத் தொடங்கிவிட்டால், உங்களுக்கு இறைவன் மனஉறுதியையும் ஆற்றலையும் வழங்குவான்’ என்றார்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக, பள்ளி ஆசிரியர்கள் ‘சான்டாகிளாஸ்’ கிறிஸ்துமஸ் வேடமணிந்து தோன்றியதுடன் மாணவ மாணவியருக்கும் இனிப்புகளை வழங்கினர். முன்னதாக, பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார். பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன் பைபிள் வசனத்தை வாசித்தார். விழாவில், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.