பள்ளியில் தேங்கும் கழிவு நீர்: பெற்றோர்கள் போராட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 75வது வார்டு சீரநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், வளாகத்தில் சேரும் சகதிகளுமாக தென்படுகிறன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் சாக்கடை நிறைந்து கழிவு நீரும் வெளியேறி பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுவதாகவும், மாணவர்கள் பூச்சிகளால் பாதிக்கப்படுவதாகவும் கூறி பெற்றோர்கள் குழந்தைகளுடன் பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடமும் அப்பகுதி கவுன்சிலரிடமும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டிய பெற்றோர்கள் உடனடியாக மாநகராட்சி நிர்வாகமோ பள்ளி நிர்வாகமோ நடவடிக்கை எடுத்து பள்ளியில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

தற்போது சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற துவங்கி உள்ளது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அதே சமயம் சாக்கடை நீர் நிறைந்து அப்பகுதி சாலைகளில் வழிந்தோடுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.