“இன்றைய இளைய தலைமுறைகளை உருவாக்குபவர் ஆசிரியர்களே” -கே.பி. ஆர்.குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி

கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி சார்பில்  “கற்போம் கற்பிப்போம்” எனும் தலைப்பில் 2 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

நிகழ்விற்கு கே.பி. ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை வகித்தார். அவர் பேசுகையில் இன்றைய இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பவர்கள் ஆசிரியர்களே” என ஆசிரியத் துறையின் உயர்வினைப் பாராட்டினார். மேலும், சமூக முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் இளைய தலைமுறையினரைப் பொறுப்புள்ளவர்களாக மாற்றி அறச்சிந்தனைகளை வளர்க்கச் செய்வது ஆசிரியர்களின் கடமை எனக் கூறினார்.

இந்நிகழ்வானது மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.  முதல் அமர்விற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியின் துணைவேந்தரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளருமான பஞ்சநாதம் கலந்து கொண்டு சமூகத்தின் மாற்றத்திற்கு உதவும் கல்வி இன்றைய நாளில் தொழிற்நுட்ப வளர்ச்சியோடு இணைந்து மேம்பட்ட நிலையை அடைந்துள்ளது. மாணவர்களின் அறிவுப்புலப்பாடும், புரிந்துணர்வுக்குரிய நுட்பங்களும் பன்மடங்கு வளர்ந்துள்ளன. பல்வகை ஆற்றல் கொண்ட மாணவர்களின் கல்விநிலையில் புதுமைக்குரிய உத்திகளைப் புகுத்துவது அடிப்படையானதென எடுத்துரைத்தார்.

இரண்டாம் அமர்வின் சிறப்பு விருந்தினராக ஆர்.கே.ஆர் கல்விக் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.கே.ராமசாமி கலந்து கொண்டு, தற்காலக் கல்விச்சூழலில் மாணவர்களின் புரிந்துணர்வுக்குச் செயல்முறை வடிவிலான கல்விமுறைகள் துணைசெய்கின்றன. ஆசிரியர்கள் எளியமுறையில் மாணவர்களுக்குக் கல்வியைக் கற்பிக்கப் புதுமையான முறையில் நவீனத்துடன் கூடிய உத்திமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

மூன்றாம் அமர்வு, ஆசிரியர்களுக்குரிய திறன்மேம்பாட்டை வளப்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கங்களாக அமைந்தன. இச்செயல்முறை விளக்கப்பயிற்சியினைக் கே.பி.ஆர்  கல்லூரியின் பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை தலைவர் தரனேந்திரன் வழங்கினார்.

மேலும், இப்பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வானது தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகப் பகுதியிலும், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் பரம்பிக்குளம் வனச்சரகப் பகுதியிலும் நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைவுகளின் சிறப்புகளை விளக்க, அனுபவக்கற்றல் முறையில் நிகழ்விடங்களுக்குச் சென்று செயல்வழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, இந்நிகழ்வின் தொடக்கத்தில் கல்லூரியின் முதல்வர் கீதா   வரவேற்புரை வழங்கினார்.

இப்பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து,  69 பள்ளிகளைச் சார்ந்த முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று சான்றிதழ்களை பெற்றனர்.