ஆடி இந்தியா: ஜனவரி 2024 முதல் கார்களின் விலை 2% உயர்வு!  

அதிகரித்து வரும் உள்ளீடு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக ஆடி இந்தியா தனது வாகன விலைகளை ஜனவரி 2024 முதல் 2% வரை அதிகரிக்க உள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் உள்ள தனது வாகனங்களின் விலையை வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2%  வரை உயர்த்தப் போவதாகவும், இந்த விலை உயர்வு அனைத்து மாடல்களிலும் பொருந்தும் என ஆடி இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஆடி இந்தியாவின்  தலைவர் பல்பீர் சிங் தில்லான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் உள்ளீடு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக எங்கள் மாடல் வரம்பில் விலை திருத்தத்தை நாங்கள் செய்துள்ளோம், மேலும், பிராண்டின் பிரீமியம் விலை நிலைப்பாட்டைப் பராமரிக்கிறோம்,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “விலை திருத்தமானது ஆடி இந்தியா மற்றும் எங்கள் டீலர் கூட்டாளர்களுக்கு நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் விலை உயர்வின் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரைக் குறைவாக இருப்பதை உறுதி செய்வோம்” என்றார்.

ஆடி இந்தியா க்யூ3 எஸ்யூவி முதல் ஸ்போர்ட்ஸ் கார் ஆர்எஸ்க்யூ8 வரையிலான வாகனங்களை ரூ.42.77 லட்சம் முதல் ரூ.2.22 கோடி வரை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.