சர்வதேச போட்டியில் 8 பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த அண்ணன் தங்கை

லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற உலக அளவிலான ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்றனர்.

‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பாக கோவை சூலூர் பகுதியில் உள்ள எம்.டி.என்., பியூச்சர் பள்ளியில் பயின்று வரும் ஆதித் மற்றும் ஆதிரை என இருவர் கலந்து கொண்டனர். அண்ணன்,தங்கையான இருவரும் லண்டன் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினர்.

லண்டனில் நடைபெற்ற, பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான கலப்பு இரட்டையர் போட்டியில் ஆதித் மற்றும் ஆதிரை ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் கிரேட் பிரிட்டன் வீராங்கனையுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஆதிரை முதலிடம் பிடித்து தங்கமும், லண்டனில் நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவு போட்டியில் நடப்பு சாம்பியன் ஆதிரை 16 வயதுக்குட்டோர் பிரிவில் தங்கம் பதக்கத்தை வென்றார். மேலும் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில், வெண்கல பதக்கத்தையம் தட்டி சென்றனர்.

கடந்த ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சகோதர,சகோதரி என இருவரும் சாதித்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் 4 தங்கம்,2 வெள்ளி,2 வெண்கலம் என 8 பதக்கங்கள் ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சர்வதேச அளவில் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றியை பள்ளி தாளாளர்கள் பாலதண்டபானி, பரிமளம் மற்றும் பள்ளி முதல்வர் என பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.