மக்களே..! இனி பொதுவெளியில் இதை செய்தால் சிறை!

பொதுவெளியில் ஆபாசமாகப் பேசினாலோ, பாடல் பாடினாலோ 3 மாத சிறைத் தண்டனையோடு அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவெளியில் அல்லது பணிபுரியும் இடங்களில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, பாடல்கள் பாடுவது, பாடல்கள் ஒலிக்கச் செய்வது, தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனை மீறி இத்தகைய செயல் செய்தால் மூன்று மாதச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள காவல் துறை, பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்வது அனைவரின் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட என்று தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் சாதாரணமாக நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இச்சட்டம் புதிதான ஒன்று இல்லை என்றும், ஏற்கனவே IPC 509 அமலிலிருந்து அதன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.