டீன் பவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

டீன் பவுண்டேசன் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து மருத்துவமனை கூட்ட அரங்கில்” ஹாஸ்பிஸ் & பாலியேட்டிவ் நோய்த்தடுப்பு மற்றும் வாழ்க்கையின் இறுதி பராமரிப்பு சிகிச்சை முறைக்கான விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திக் மகாராஜன் கலந்து கொண்டு “விழிப்புணர்வு பதாகை” திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
 மகப்பேற்றுத்துறை தலைமை மருத்துவர் சித்ரா முன்னிலை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்  நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.
மருத்துவர் சத்யா நோய்த்தடுப்பு மற்றும் வாழ்க்கையின் இறுதி பராமரிப்பு சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.    அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயராமன் தலைமை தாங்கி புற்றுநோய் மற்றும் பாலியேட்டிவ் சிகிச்சை முறைகள் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து கூறினார். மேலும், அத்தகைய தானம் எத்தனை மணி நேரத்திற்குள்ளாகக் கொடுக்கலாம் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
டீன் அறக்கட்டளை இயற்கை மருத்துவர் கேசவரமணன் உலக அளவில் ஒப்பிடுகையில், இந்திய அளவில் வீடு சென்று மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்று கூறினார்.
ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிதாகும், புற்றுநோய் மற்றும் பாலியேட்டிவ் சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் எடுத்துரைத்தார்கள்.
காரமடை டீன் அறக்கட்டளை மற்றும் எஸ்பிஐ அறக்கட்டளை – “எஸ்பிஐ – அனுக்கிரஹா”  திட்டத்தின் சிகிச்சை முறைகள் மற்றும் அதன் பயன்களைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏசா ஞான தாசன் எடுத்துரைத்தார்.
இதில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், டீன் பவுண்டேசன் செவிலியர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.