ஒரு நாள் மழைக்கே ஸ்மார்ட் சிட்டி தாங்கலீங்க…!

ஒரே ஒரு மழை தாங்க! அந்த ஒரு மழையே ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தான் பவுலிங்கை அடிச்ச மாதிரி, நம்ம  ஸ்மார்ட் சிட்டியை புரட்டி போட்டுடுச்சு!

இதுல என்னங்க அதிசயம், மழை வர்றது இயற்கை தானே என்று சொல்லலாம். ஆனா அந்த மழை வந்தவுடனே நம்ம ஸ்மார்ட் சிட்டியும், குடிமக்களும் படற அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல. நம்ம சாலை அமைப்பும், அதை நாம பராமரிக்கிற விதமும், மக்கள் படுகிற கஷ்டங்களும் சொல்லி மாளாது.

May be an image of text

கடந்த புதன்கிழமை இரவு மழை வந்தது. அவ்வளவுதான் அடுத்த நாள் காலையில் ஸ்மார்ட் சிட்டியே ரெண்டு பட்டு போச்சுங்க. இத்தனைக்கும் எல்லா ஸ்கூலுக்கும் மழை காரணமாக லீவ் விட்டுட்டாங்க. வழக்கமான நேரத்துக்கு கிளம்பினவங்க, பிளான் பண்ணி முன்கூட்டியே கிளம்புனவங்க, இப்படி எல்லோருமே கோவை கிழக்கு மேற்கு சந்திக்கிற இடம் இருக்கு பாருங்க, அதாங்க நம்ம மேம்பாலம்ஸ், அங்க சிக்கி ஆமை போல இன்ச் , இன்ச்சாக ஊர்ந்து போனங்க! பாலத்துக்கு அடியில் வழக்கம் போல மழைத் தண்ணீர் சாக்கடை தண்ணீர் நிரம்பி நிற்குதுங்க. மாநகராட்சி அதிகாரிகளும் , காவல் துறையினரும் உண்மையிலேயே பாவம்!

May be an image of 1 person, body of water and text

அவ்ளோ பெரிய சென்னையிலேயே ஏதோ திட்டம் போட்டு மழை தண்ணியை பாதிப்பு இல்லாம பண்ணிட்டு இருக்காங்க. நம்ம ஊர்ல மட்டும் வருஷக்கணக்கா இது ஒண்ண மட்டும் சரி செய்ய முடியல. கிட்டதட்ட ஏழு, எட்டு மாசமா மழையே இல்ல, அப்ப எல்லாம் ஏதாவது வேலை செஞ்சு இருக்கலாம். அப்படி சீரமைப்பு எதுவும் நடந்த மாதிரி தெரியல.

இந்த மாதிரி மழை வந்தவுடனே எல்லோரும் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ண முடியாது. மழை வர்றது பிரச்சனை இல்ல. அந்த மழைநீருடன், சாக்கடை நீர் கலப்பது, அப்படியே குளம் குட்டையில் அந்த தண்ணி போய் கலக்குறது, ஏற்கனவே குழி, பள்ளமா இருக்கிற சாலைகள் பாளம் பாளமா உடைஞ்சு போறது இதைத்தான் கவனிக்க வேண்டும்.

May be an image of 2 people, road and text

இதுபோக ஜாதகம் சரியில்லாதவங்க சும்மாவே நம்ம சாலைகள்ல விழுந்து விழுந்து கும்பிட்டு எழுவதும் உண்டு. அதுவும் நம்ம வருண பகவான் இப்படி கண் திறக்குற நேரத்துல உயிரை பிடித்துக் கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் பெய்த மழையில் கூட கோவை ரயில் நிலையம் அருகே சாலை + குழி + மழைநீரில் ஒரு அப்பாவி வாகன ஓட்டி மின்சார தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். பலர் ஊமைக்காயம், சிறு காயங்களுடன் இன்னும் வாழ்க்கையில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும். ஒருபுறம் போக்குவரத்து நெரிசல், மழை வருவது இயற்கை என்பதும் சரி. ஆனால் கூடவே சாலை பணிகளில் உள்ள குறைபாடுகளை கவனித்து சரி செய்ய வேண்டியது தொடர்புடைய துறைகளின் கடமை ஆகும்.

அந்தத் திட்டம், இந்த திட்டம், அந்த கட்சி, இந்த கட்சி என்பது எல்லாம் தாண்டி இது மிகவும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று ஆகும். ஸ்மார்ட் சிட்டி என்று போர்டு மாட்டி வைத்துக் கொண்டு இருக்கின்ற கோவை நகரத்தில் அடிப்படை கட்டமைப்புகளான சாலை வசதிகளும் கழிவு நீர் அகற்ற வாய்ப்புகளும் சரியாக செயல்படுகின்றனவா என்று கவனிக்க வேண்டும்.

மழை வருவது என்பது இயல்பு. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் மழை நீர் நிர்வாகத்தை சரி செய்ய முடியும். அதுவும் குறிப்பாக இந்தியாவில் தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கும் கோவை என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில் சாலை வசதிகளும் சரியாக இருக்க வேண்டும் அல்லவா?

May be an image of 1 person, motorcycle, body of water and text

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரும் நகரமான கோவையின் நிலை இன்று பரிதாபகரமாக இருக்கிறது. ஒரே ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால் இங்கு மழை ரெண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்வதில்லை. அப்படி ஒன்று நடந்தால் தெரியும் சங்கதி!

கோவை தாங்காது என்பதுதான் இதில் கிடைக்கும் நீதி. இன்றுள்ள தொழில் நகரம், மருத்துவ சுற்றுலா நகரம், கல்வி நகரம், பஞ்சாலை நகரம் என்றெல்லாம் இருந்த பெயர் போய் இன்று பஞ்சர் ஆகிவிட்ட நகரமாக கோவை காட்சி தருகிறது. வேண்டுமானால் நமது சாலையில் ஒரு ரவுண்டு போய் வந்து பார்த்தால் புரியும் சந்திரயான் லேண்டருக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தயாரித்த கோவை நகரம் இன்று சாதாரண சாலை வசதிகள் இல்லாமல் குண்டும், குழிகளோடு வாகன ஓட்டிகள் போய்க் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதல்ல.