கே.பி.ஆர் கலை கல்லூரியில் பெண்களுக்கான வாழ்வியல் நிகழ்வு!

கே.பி.ஆர் கலை கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தகவல் தொழில்நுட்பவியல் பிரிவு மற்றும் மாணவர் குழு இணைந்து இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் தொடக்கம் மற்றும் பெண்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு எனும் நிகழ்வினை அண்மையில் நடத்தியது.

இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.  கணினி அறிவியல் துறையின் புலமுதன்மையர் ஷர்மிளா வாழ்த்துரை வழங்கினார்.

முதல் அமர்வின், சிறப்பு விருந்தினராக  இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் முதன்மைத் தலைவர் ராஜலட்சுமி சுப்ரமணியன் கலந்து கொண்டு, இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் தொடக்கநிலை மற்றும்  சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து, போஸ் வல்லுநர் ஹரிசங்கர் எத்திராஜ்  பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள், பெண்கள் துணிவுடன் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். இவ்வமர்வில் சூப்பர் ஹெண்டில்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உதிரமூர்த்தி மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தித் தொழில் முனைவோர் ஆவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிநியமனங்கள் பெறுவதற்கான வழிவகைகளை விளக்கினார்.

இரண்டாம் அமர்வின் சிறப்பு விருந்தினராக பேட்ரா கார்ப்பரேசன்ஸின் செயலாளர் மஞ்சு உன்னிகிருஷ்ணன் கலந்து கொண்டு, மாணவர்கள் தம்மை நேர்காணலுக்குத் தயார் செய்தல், நேர்காணலை எதிர்கொள்ளும் முறைகள், அதற்கான செயல் திட்டங்கள் முதலியவற்றை எடுத்துரைத்தார். மேலும், டேலண்ட் ஹாக்கியூசன்ஸ் தலைவர் பாரதிப்பிரியா இளைஞர்கள் வாழ்க்கையில் குறிக்கோளை வகுத்துக் கொள்ளுதல், அக்குறிக்கோளை அடைவதற்கான உத்திகள், அதை நடைமுறைப்படுத்தும் தன்மை ஆகியவற்றை விளக்கினார்கள்.

இந்நிகழ்வினைக் கணினி அறிவியல் துறையின் தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் சுமதி மற்றும் துறைப் பேராசிரியர் ஸ்ரீமதி  ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.