இந்திய வீரர்களின் வரலாற்று சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 4 ஆவது சீசன் சீனாவின் ஹாங்சு நகரில் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் 100 பதக்கங்களுக்கும் மேல் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்வீட்டர்) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்வீட் செய்தியில் “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள் என்பதை கேட்ட  ஒரு கணம் இணையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன். இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம். நம் வீரர்கள் புதிய மைல்கல்லை எட்டி நம் இதயங்களையும் வென்றுவிட்டனர்.  விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும்  ஆதரவு அமைப்புக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

100 பதக்கங்களுக்கு மேல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றது இதுவே முதல் முறை.  கடந்த ஆண்டு 15 தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், தற்போது 29 தங்கம் வரை வென்று அசத்தி உள்ளனர்.