“லோகி ஒரு திரைச் சித்தன்” மன்சூர் அலிகான் அடித்த பல்டி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜை போராட அழைப்பு விடுத்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இன்னும் திரையரங்குகளில் திருவிழாவை போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு அறிக்கையில்  “தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு” என்று லோகேஷ் கனகராஜை விமர்சித்திருந்தார். அத்துடன் “வாங்க, பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்” என்று அழைப்பு விடுத்திருந்தார். இதனை பலரும் சோசியல் மீடியாக்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்த சூழலில் தன்னுடைய முந்தைய அறிக்கைக்கு மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையை  தற்போது வெளியிட்டுள்ளார்.  அதில், “யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே! குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோ’வில் ‘தம்மாத்தூண்டு’ என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனாக ஆக்கிவிட்டது! அதற்காக லோகேஷ் மற்றும் அவரது குழுவினர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

லோகி ஒரு திரைச் சித்தன். என் வாழ்நாளில் 350க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை” என தெரிவித்துள்ளார்.