மகிழ்ச்சி, அன்பை வெளிப்படுத்தும் விழா ‘பொங்கல்’  – கவிதாசன், செயலர், சச்சிதானந்த பள்ளி.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  இதில் சச்சிதானந்தர் பொங்கல், சூரியப் பொங்கல், குடும்பப் பொங்கல், ஆசிரியர் பொங்கல், மாணவர் பொங்கல் என ஐந்து புதுப்பானைகளில் பொங்கல் வைத்துச் சூரியனை வழிபட்டனர்.

தொடர்ந்து, மாணவ மாணவியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி, கபடி மற்றும் கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பொங்கல் விழாவின் பெருமைகளை உணர்த்தும் வகையில், மாணவியர் வள்ளிக்கும்மிப் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவரச் செய்தனர்.

நிகழ்விற்குப் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமையேற்றார்.  அவர் தனது உரையில், ‘மக்களிடத்தில், மகிழ்ச்சியும் அன்பும் பொங்கி வர இன்பமாக வாழ வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுவது பொங்கல் விழாவாகும். தமிழரின் பண்பாட்டைப் போற்றிக் காக்கும் வகையில் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழாவினை மாணவ மாணவியர் நடத்தியதுடன், நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி தமிழர் பெருமையை அனைவருக்கும் உணர்த்தியது சிறப்பிற்குரியதாகும். அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்’ என்று பேசினார். தொடர்ந்து, பொங்கல் சிறப்புக் கவிதையினை வழங்கி,  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.

பள்ளிக் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.