‘நாகை to யாழ்ப்பாணம்’ கப்பல்; தொடங்கப்பட்ட வேகத்தில் நிறுத்தப்பட்ட சேவை

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அண்மையில் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் தினமும் சென்றுவர புதிய கப்பல் சேவையை கப்பல் போக்குவரத்து துறை தொடங்கியது. இந்த சேவையை கடந்த அக்டோபர் 14 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

150 பேர் பயணிக்கக்கூடிய கப்பலில் பயணக் கட்டணமாக ரூபாய் 6 ஆயிரத்து 500, உடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் என மொத்தம் 7 ஆயிரத்து 670 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. சேவை தொடங்கிய முதல் நாள் தமிழகத்திலிருந்து 50 பெரும், இலங்கையிலிருந்து 30 பேரும் பயணித்தனர். அதன்பிறகு, பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால், பயணக் கட்டணத்தில் 75 சலுகை அளிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து சேவை திங்கள், புதன், வெள்ளி என வாரத்துக்கு மூன்று நாளாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு கப்பல் சேவையை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மேலும், வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.