பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை!

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூக்கட்டும் பெண் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் கீழ் உதவிகளை மத்திய இணை அமைச்சர்முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

பாரம்பரிய கருவிகளுடன், கை திறனைக் கொண்டு வேலை செய்யும் மக்களுக்குச் சுமார் 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆக்ஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் ட.முருகன் பேசுகையில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், வீடு, வீடாக குடிநீர் வழங்கும் திட்டம்,  முத்ரா திட்டம், சிறு வியாபாரிகளுக்கான திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நமக்கு கொடுத்து உள்ளார். அதன் வகையில், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று பிரதமர்  இந்தியா முழுவதும் துவக்கி வைத்தார். அதில் நகை செய்பவர்கள், மண்பானை  செய்பவர்கள், தச்சர்கள், செருப்பு தைப்பவர்கள், பூ கட்டுபவர்கள், கைவினைப் பொருட்கள் செய்பவர்கள்  போன்ற 18 வகையான தொழில் செய்பவர்கள் பயனடைவார்கள்., என்றார்.