படிப்பதற்கு பணம் ஒரு பொருட்டல்ல – வழிகாட்டல் நிபுணர் அஸ்வின்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணரும் ஆய்வாளருமான அஸ்வின் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலமேலு, தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி , நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில்  சிறப்புரை வழங்கிய அஸ்வின், உயர்கல்வியின் மகத்துவத்தையும் பெண்கல்வியின் மகத்துவத்தையும்  எடுத்துரைத்தார். அதோடு பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கக்காட்சி  மூலம் விரிவாக எடுத்து கூறினார். மேலும் “படிப்பதற்கு மனம் விரும்ப வேண்டும். அதற்கு பணம் ஒரு பொருட்டல்ல”  என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை,  ஆங்கில இலக்கிய சமூகம், தமிழ் மன்றம் போன்ற குழுக்கள் மூலம் செயல்பாடுகள் நடத்தப்பட்டது.  இதில் மாணவர்கள் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.

பல்வேறு பள்ளிகளை சார்ந்த 1500 க்கும்  மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.