இரத்தினம் கல்லூரியில் அறிவியல்  மாணவர்களுக்கான நிதியுதவி திட்டம் துவக்கம்

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மத்திய அமைச்சரவையின் கீழ் அமைந்துள்ள உயிரித் தொழில் நுட்பத்துறை ஸ்டார் காலேஜ் நிதியுதவி திட்டத்தை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்டார் காலேஜ் திட்டம் என்பது மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு அரசால் நிதி உதவி வழங்கி  சிறப்பிக்கும் திட்டமாகும்.அந்த வகையில் இந்திய அரசின்  உயிரி தொழிற் நுட்பவியல் துறையின் சார்பாக இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 5 துறைகளுக்கு ரூபாய் 1.65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு குறிப்பாக உயிரி தொழிற்நுட்பவியல், நுண்ணுயிரியியல், கணினி அறிவியல் ,இயற்பியல்  மற்றும் கணிதவியல் ஆகிய துறை சார்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம், செய்முறை பயிற்சி வகுப்புகள், செய்முறை  ஆய்வுக் கூடங்களை மேம்படுத்துதல் ,தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லுதல் மற்றும் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி ஆகியவற்றிற்காக இந்த நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.

நிகழ்விற்கு கல்லுரியின் தலைவர்  மதன்.அ.செந்தில்  தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை  வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி கரீமா குப்தா கலந்துகொண்டார். அவர் பேசுகையில்,  இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் எவ்வாறு பயனடைவார்கள் எத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்வார்கள் என்றும், போரசிரியர்களுக்கு எவ்வகையில் இத்திட்டம் பயனளிக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

இதில்  பூ.ச.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரி துறையின் பேராசிரியர்  இராஜேந்திரன், துணை முதல்வர் மற்றும் ஸ்டார்  காலேஜ்  திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கல்லூரியின் செயலாளர் மற்றும் முதன்மை நிர்வாகி மாணிக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் புல  முதன்மையர் சபரீஸ் , வணிகவியல் துறை புல முதன்மையர் ஹேமலதா,  மாணவர்கள் புல முதன்மையர்  சற்குருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.