ஹெல்மெட்டில் புகுந்த நாகப்பாம்பு!

கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜோசன் என்பவரின் ஹெல்மெட்டில் பாம்பு புகுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சூரில் பணிபுரிந்து வரும் ஜோசன் வழக்கம்போல் தன் அலுவலகத்தின் முன்பு, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார். பின்னர் பணி முடிந்து வீடு திரும்பிய அவர், தான் வாகனத்தில் வைத்திருந்த ஹெல்மெட் அசைவதைக் கண்டிருக்கிறார். உள்ளே ஏதேனும் இருக்குமோ என சந்தேகித்து சோதனை செய்தபோது வெளிப்புறத்தில் ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும், ஹெல்மெட் அசைவில் சந்தேகம் கொண்ட ஜோசன், அருகே உள்ள வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தகவல் அறிந்து வந்த பாம்புப்பிடி தன்னார்வலர் லிஜோ, ஹெல்மெட்டை பிரித்து சோதனை செய்தபோது அதில், கொடிய விஷம் கொண்ட சிறிய நாகப்பாம்பு இருந்திருக்கிறது. அதை பத்திரமாக வெளியே எடுத்து பின் வனத்தில் விட்டார். இது குறித்து லிஜோ கூறுகையில், “விஷம் தன்மை கொண்ட பெரிய நாகப்பாம்புகளைவிட, சிறை நாகப்பாம்புகளின் விஷம் அதிக வீரிய தன்மை கொண்டதாக இருக்கும். உயிரையும் கொள்ளும்” என்றார்.

இருசக்கர வாகனத்தில் வைத்துச் சென்ற ஹெல்மெட்டில் பாம்பு புகுந்தது அப்பகுதியில் இருந்தவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.