பொன்னியின் செல்வன் குழுவுக்கு கோவை வழக்கறிஞர்கள் கோரிக்கை

கோவை வழக்கறிஞர்கள் பொன்னியின் செல்வன் குழுவுக்கு கூறியதாவது: இந்த படத்தின் விளம்பரத்தில் PS -1 என குறிப்பிடாமல், முழுப்பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடக்கோரி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மூத்த வழக்கறிஞரான சுந்தரவடிவேலு மற்றும் லோகநாதனும் இணைந்து பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் சுந்தரவடிவேலு கூறுகையில், லைகா தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை குறித்து இது உண்மை சரித்திரத்தை, கற்பனை கலந்த நாவலாக பொன்னியின் செல்வனை கல்கி எழுதி இருக்கிறார்.

இது தமிழர்களான சோழர்களின் வரலாற்றையும், வாழ்வியலையும், வீரம்,வணிகம், மற்றும்   பொருளாதாரத்தை  மேம்படுத்த நடத்தப்பட்ட போர்கள் குறித்து இந்த கதை பேசுகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க 1950ஆம் ஆண்டில் எம்.ஜி ஆர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதையடுத்து 1990ல் மணிரத்தினம் முயற்சி எடுத்து தற்போது எடுக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. அதை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் விளம்பரங்களில் பொன்னியின் செல்வன் என்ற பெயரை PS-1 என பெரிதாக போட்டுவிட்டு கீழே சிறியளவில் பொன்னியின் செல்வன் என குறிப்பிட்டிருக்கின்றனர்.

உலக மொழிகளில் இப்படம், மொழி பெயர்க்கப்படும் போது PS -1 என ஆங்கிலத்தில் வரும் தமிழில் வராது. PS என்பது பாதிரியாரை குறிக்கக்கூடிய சொல். வேறு மதத்தை குறிக்ககூடியது என்பதால் இதை தவிர்க்க வேண்டுகிறோம்.

ராஜ ராஜ சோழன் சிறு வயதில் காவிரி ஆற்றில் விழுந்த அவரை பொன்னி என்ற பெண் காப்பாற்றினாள். அதனால் அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர் வந்துள்ளது. இவர் மதத்திற்கு எதிரானவர் அல்ல. இது மதப்போர் என தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.

எந்த மொழியாக இருந்தாலும், பொன்னியின் செல்வன் என குறிப்பிட வேண்டும். ஆங்கில படத்தில் அவர்கள் பெயரை மாற்றுவதில்லை. அதைப்போல் தமிழ்ப்பெயரையே ஆங்கிகத்தில் போட வேண்டும். விளம்பரங்களிலும் மாற்ற வேண்டும்.

வீரத்தமிழர்களின் வரலாறை திரைப்படங்களில் தமிழ்ப்பெயர்களில் பயன்படுத்தினால்தான், தமிழர்களின் வரலாறு மறைக்கப்படாமல் இருக்கும்.

பொன்னியின் செல்வன் என்ற பெயரையே உலகின் எந்த மொழியில் எடுத்தாலும் பெயரை மாற்றக்கூடாது. தமிழன் என்கிற முறையில் கோரிக்கை விடுக்கிறோம், ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தயாரிப்பாளர் மற்றும் இயகுனரின் விருப்பம்.

கமர்ஷியல் படத்திற்கும், வரலாற்று படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தமிழர்களின் சோழர்களின் வீரத்தை போற்றும் படம் என்பதால் தான் இந்த கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.