கே.எம்.சி.ஹெச். செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம்  சார்பில் சிறப்பு முகாம்

கே.எம்.சி.ஹெச். செவிலியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டச் சார்பில் சிறப்பு முகாம் வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. முகாமில் 50 செவிலிய மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்தனர்.

முதல் நாள் முகாமில்  சிறப்பு விருந்தினர்களாக என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணிதிட்ட அலுவலர் கிருஷ்ணா ராஜ், மோப்பிரிபாளயம் பேரூராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் வாகராயம்பளயம் ரோட்டரி தலைவர் பாலகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரண்டாம் நாள் முகாமில் மக்கும் மற்றும் மக்கா குப்பை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கே.எம்.சி.ஹெச்.  செவிலியர் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்.

மூன்றாம் நாள் முகாமில்  இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதில் வாகராயம்பாளையம் ஆரம்பச் சுகாதார நிலையம் பொது நல மருத்துவர் டாக்டர். சுவீட்டி ரெக்கஸ் மற்றும் வாகராயம்பாளையம் ஆரம்பச் சுகாதார நிலையம் செவிலியர் ஜெயலலிதா  ஆகியோர் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு  வழங்கினர். சாலையோர வியாபாரிகளுக்குக் கல்லூரி மாணவிகள் தயாரித்த காகிதப் பைகள் வழங்கப்பட்டது. மேலும்,  ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய பொம்மலாட்டம் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது இம்முகாமில் 50 செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர்.

நான்காம் நாள் முகாமில்  யோகா ஆசிரியர் வசுமதி கர்ப்பிணிப் பெண்களுக்கான யோகாசன முறைகளையும் அதன் பயன்களையும் எடுத்து உரைத்தார். அதைத் தொடர்ந்து மகளிற்கான சமையல் போட்டிகள் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள்  கலந்து கொண்டு பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகளைச் சமைத்தனர்.

ஐந்தாம் நாள் முகாமில்  வாகராயம்பாளையம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நல மேம்பாடு முகாமில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு உயரம், எடை மற்றும் கை சுற்றளவு செவிலியர் கல்லூரி மாணவர்களால் அளவிடப்பட்டு ஆரோக்கியமான குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் குழந்தைகள், இளம்பெண்கள்  ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கல்லூரி பேராசிரியர் மஹாலக்ஷ்மி வழங்கினார்.

ஆறாம் நாள் முகாமில் சின்ன தடாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு அனுவாவி சுப்ரமணியசுவாமி கோவிலுக்குச் சென்று அங்குள்ள வளாகத்தைச் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து சுத்தம் செய்தனர்.

ஏழாவது நாள் நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்கவுரை  கல்லூரி பேரசியரியர் சுரேஷ் வழங்கினார். வாகராயம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் குடற்புழு பற்றிய விழிப்புணர்வு செவிலியர் கல்லூரி மாணவிகளால் வழங்கப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரம், கே.எம்.சி.எச் மருத்துவக் கல்லூரி சமூக நலத்துறை மருத்துவர் சீத்தாரமன் மற்றும் ஊர்த் தலைவர்கள் உள்ளிட்டோர்  சிறப்புரை வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.