உயர்ந்த சிந்தனைகளால் படிப்பில் பின்தங்கியவர்களும் சாதிக்கலாம்!

 – நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் உரை 

ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் அறங்காவலர் மற்றும் செயலர் சுந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்திய அரசின் வருவாய்த்துறை மற்றும்  நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “பட்டமளிப்பு விழா என்பது, கல்வி பயின்ற மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்  ஒரு சிறப்பான நாளாகத் திகழ்கிறது. பட்டம்  பெற்ற மாணவர்கள் தொழில் துறையிலோ, வர்த்தகத் துறையிலோ சிறந்த தொழில் முனைவோராகச் சாதிக்க முடியும். படிப்பில் பின் தங்கிய மாணவர்களும்  தம் உயர்ந்த சிந்தனைகளால் வாழ்க்கையில் மேன்மை அடையலாம். மாணவர்கள் கற்ற கல்வியினால் அவர்களின் குடும்பம் மட்டுமல்லாமல் நாட்டையும் உயர்த்த வேண்டும்” என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 2018-2021 மற்றும் 2019-2022 ஆம் கல்வியாண்டில் வணிகவியல், கணினி அறிவியல், உயிர் தொழில்நுட்பவியல், கணிதவியல் போன்ற துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயின்ற 443 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

இவ்விழாவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவகுமார், கோவை, ஐ.ஏ.எஸ்.அகாடெமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் அகத்தமிழ் அருண்குமார், கல்லூரியின் துணை முதல்வர்கள்,  துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் நிர்வாக மேலாளர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.