மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச முகாம்!

கோவையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை நகர வள மையம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் உடல் இயக்க குறைபாடு, கண் பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான மன வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவு, ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை படிவங்களும் வழங்கப்படுகின்றன. மேலும் 52 பேருக்கு உதவி உபகரணங்களும், 25 பேருக்குக் காதொலி கருவியும் வழங்கப்பட உள்ளது.

இதில், கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் பெற்று செல்கின்றனர் . மேலும் இங்கு வருபவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது.