கே.பி.ஆர். கல்லூரி சார்பில் 8ஆம் ஆண்டு கருத்தரங்கு!

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய  தர வட்ட மன்றம் – கோவை மையம் (Quality Circle Forum of India – Coimbatore Chapter) இணைந்து 8வது வருடாந்திரக் கருத்தரங்கை நடத்தியது.

இக்கருத்தரங்கில்  பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் 176 அணிகள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் பல்வேறு தர மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் படங்கள் கொண்டு விவரித்தனர். இதை நீதிபதிகள் குழு, நிறுவனங்களின் தர மேம்பாட்டுச் செயல்பாடு மற்றும் விவரிப்பு முறைகளை வைத்து மதிப்பீடு செய்து 160 அணிகளுக்குத் தங்கம், 15 அணிகளுக்கு வெள்ளி, 1 அணிக்கு வெண்கலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதில் தங்கம்  வென்றவர்கள், வருகின்ற 2024  ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள தரக் கருத்துகளின் தேசிய மாநாட்டில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரியும், இந்தியாவின் தர வட்ட மன்றம், கோவை மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான நடராஜன் மற்றும் கல்லூரியின் முதல்வர்  ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

பரிசளிப்பு விழாவில் இந்தியாவின் தர வட்ட மன்றம், கோவை மைய ஆலோசகர் யோகேஸ்வரி 5S வழிமுறைகள் மற்றும் அதன் பயன்களை குறித்து உரையாற்றினார். அதையடுத்து, “கொஸோ இந்தியா” நிறுவனத்தைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் ஓசூர் டி.வி.எஸ். நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர்  நடைமுறை படுத்தியுள்ள 5S வழிமுறைகளை விவரித்தனர்.

மேலும், இவ்விழாவில் கடந்த பத்து ஆண்டுகளாக  இந்தியாவின் தர வட்ட மன்றம், கோவை மையத்தை நிறுவி சிறப்பாக சேவையாற்றிய மோகன சுந்தரி கௌரவிக்கப்பட்டார்.