பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, கல்வியில் தொழில்நுட்ப புரட்சி         – டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் பட்டமளிப்பு விழாவில் நல்ல பழனிசாமி பேச்சு

டாக்டர் என்.ஜி. பி கல்வியியல் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில்  2018-19, 2019-21, 2020-22 ஆகிய கல்வி ஆண்டுகளில் கல்வியியல் பட்டப்படிப்பை முடித்த 255 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

விழாவிற்கு  கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி  தலைமை வகித்தார். அவர் பேசுகையில், “பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் கூடிய நல்ல தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். மனிதனுக்கு அறிவுதான் முக்கியமானது. அறிவுதான் செல்வம். அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்று கல்வியிலும் தொழில்நுட்பத்தால் புரட்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் எங்கும் எதிலும் கல்விக்கான வாய்ப்புகள் நிறைந்துள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதே ஆசிரியர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக,  சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்  குமாரசாமி  கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் “தனிமனித ஒழுக்கமும் தனிமனித வளர்ச்சியுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை. மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும். மாணவர்களுக்கு வழிகாட்டல் தரும் ஆசிரியராகத் திகழ வேண்டும். உயர்ந்த குறிக்கோளோடு எச்செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் உயர்ந்த நிலையை அடைய முடியும். சிறந்த அறிவுடன் நற்பண்பாளராக விளங்கிப் பெற்றோருக்கும் படித்த கல்லூரிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். கண்டிப்பு கலந்த அன்பான ஆசிரியராகவும் மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவாக்கும் திறன் கொண்ட ஆசிரியராகவும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்” என்று வாழ்த்திப் பேசினார்.

பின்னர் பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக விழாவிற்கு கல்லூரி முதல்வர் இராமசாமி வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் செயலர்  தவமணி தேவி பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி.  ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் அருண் பழனிசாமி, தொழில் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் மதுரா பழனிசாமி, கல்விசார் இயக்குநர் முத்துசாமி, முதன்மைச் செயல் அலுவலர் புவனேசுவரன், முதன்மை இயக்கு அலுவலர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இதில் டாக்டர் என். ஜி. பி. கல்விக்குழுமத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரி முதல்வர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.