இவரை போன்றவர்கள் இருக்கும் வரை.., சிட்டுக் குருவிகள் அழியுமா?

அன்றைய காலகட்டத்தில் வீட்டில் சிட்டுக் குருவிகளை வளர்த்துவந்த சூழல் இருந்தது. அந்த அளவிற்கு சிட்டுக் குருவிகள் மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தது. சொல்லப்போனால், அவை மனிதர்களை அண்டி வாழும் பறவையினம். அவை எழுப்பும் கீச் கீச் ஒலிகள் அவ்வளவு இனிமையானவை. அப்போது எல்லாம் ஓட்டு வீடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும்  சிட்டுக் குருவிகள் கூடு கட்டி வசித்தன. வீட்டில் இரைக்கும் தானியங்களை உண்டு வாழ்ந்தது.

ஆனால், இன்றைய நவீனக் காலத்தில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அழிவின் விளிம்பில் மெல்லமெல்ல அழிந்து வரும் உயிரினம் பட்டியலில்  சிட்டுக் குருவிகள் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

நகரங்களில் சிட்டுக் குருவிகளைக் காண்பது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கான சூழல்கள் தற்போது இல்லை. மாடி வீடுகளும், பல அடுக்குமாடி பிளாட் வந்துவிட்டது. அதோடு, பெரும்பாலான வீட்டில் வெளிக்காற்று உள்ளே வர முடியாதபடி, வீடு முழுவதும் ஏ.சி பொருத்தப்படுகிறது. மேலும், அலைப்பேசி பயன்பாடுகள் அதிகரிப்பு, அலைபேசி டவர்களும் அதிகரிப்பு என அடுக்கடுக்கான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய சூழல்களைப் போக்க சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயற்கை ஆர்வார்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவர்களுடன் இளைஞர்களும் இணைத்து மக்களிடம் சிட்டுக் குருவிகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினமாக மார்ச் 20ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இத்தகைய முயற்சியால் சிட்டுக் குருவிகள் மீதான விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அப்படித்தான், சிவகங்கை மாவட்டம் விருதுநகரை சேர்ந்த ஒருவர் சுமார் பத்தாயிரம் சிட்டுக் குருவிகளுக்குத் தினமும் உணவு அளித்து வருகிறார். குறைந்தது ஐயாயிரம் சிட்டுக் குருவிகள் தினமும் தன் வீட்டுக்கு வரும் என்று கூறும் அவர்.,

முதலில் ஒன்று இரண்டு குருவிகள் வந்ததாகவும் அதற்க்கு சிறு தானியங்களை உணவாக அளித்தபின் சாப்பிட வரும் குருவிகளின் வரத்து அதிகரித்து. அதனைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது. இதற்காக மட்டும்  மாதம் 6,700 ரூபாய் செலவு செய்கிறேன். இன்னும் அதிகமாக வந்தாலும் உணவளிக்கும் தன்மை தன்னிடம் இருப்பதாகத் தெரிவிக்கிறார். சாப்பிட வரும் குருவிகள் எழுப்பும் ஓசை அவ்வளவு இனிமையாகவும் பிரமிக்கவும் வைக்கிறது. சிட்டுக் குருவிகள் என்றுமே மனிதனை அண்டி வாழும் ஓர் உயிரினம்.

பறவைகள் மீது கொள்ளும் அன்பு குறையாதவரை சிட்டுக் குருவிகள் போன்ற உயிரினங்களின் எண்ணிக்கையை நம்மால் அதிகரிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.