மனநலம் பாதிக்கும் “செல்போன் கேம்” – விவரிக்கிறது., சிறுவர்களின் நிலை

நவீன இணையதளயுகத்தில் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை ஆறாம் விரலாக செல்போன் இருக்கிறது. செல்போன் இல்லையெனில் அணுவும் அசையாது என்பது போல், அனைவரிடத்திலும் ஒன்றாகிவிட்டது.

இயந்திரமாக சுழலும் வாழ்க்கை சூழலில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. அதனால், குழந்தைகளை சமாளிக்க பெற்றோர்கள் தங்கள் செல்போன்களை கொடுத்து பழக்கப்படுத்தி  விடுகின்றனர். ஆகையால் சிறுவர்கள் செல்போன் கேமுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்களிடம் செல்போன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமூக பொறுப்பாளர்கள் என அனைவரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. என்னதான் செல்போன் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தினாலும், ஆங்காங்கே சில சம்பங்கள் நிகழத்தான் செய்கிறது.

அப்படியாக, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் வீட்டைப் பூட்டிக் கொண்டு செல்போனில் கேம் விளையாடி இருக்கிறான். செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட அவன், திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்டிருக்கிறான். இதனை பார்த்த அவனின் தாய் அச்சத்தில் அவனை  மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளார். அவரால், சிறுவனை தன் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. இதனையடுத்து, கட்டுப்பாட்டு இழந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது, மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.

இப்படி நடக்கும் சம்பவம் முதல்முறை அல்ல. சென்ற ஆண்டு திருநெல்வேலியில் 17 வயது சிறுவன் தொடர்ச்சியாக செல்போன் கேம் விளையாடி மனபிற்ழ்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. மேலும்,  அதிக நேரம் கேம் விளையாடியதால் பெற்றோர் கண்டித்ததற்காக தற்கொலை செய்தவர்களும் உண்டு. அந்த செய்திகளையும் நாம் கடந்து செல்கிறோம்.

இதன் விளைவு, அதிகப்படியான நேரங்களை செல்போனில் சிறுவர்கள் செலவிடுவதால் அவர்களுக்குத் தோல்வி மனப்பான்மை இல்லாமல் போய்விடுகிறது. எதிர்த்துப் போராடும் குணமற்றவர்கள் ஆகிறார்கள். சமூக சீர்கேடுகளுக்கு  வழிவகுக்கிறது. இதன் உச்சம் மனபிற்ழ்வு நோயால் பாதிக்கப்படுவது. ஆகையால், கூடுமானவரைப் பெற்றோர்கள்  செல்போனில் நேரம் செலவிடுவதைத் தவித்துவிட்டு குழந்தைகளுடன் பேசி, அவர்களின் செல்போன் மோக நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள் என்கிறார் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்.