செல்வத்தை அள்ளித்தரும் கோவை திருமலா திருப்பதி!

பெருமாளுக்கு மிகவும் உகந்த, சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில், திருப்பதி ஏழுமலையானின் அதே பிரம்மாண்ட தோற்றத்தில், கொங்கு மண்டலத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ வேங்கடாசலபதியின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்போம்.

கோயம்புத்தூர், கொடிசியா பகுதியில் அமைந்திருக்கும் இத்திருத்தலத்தில் “திருப்பதி வேங்கடாஜலபதி” என்னும் பெயரில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிக்கிறார். சிற்பக் கலைக்கு கருவூல அடையாளமாகத் திகழும் மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட இப்பெருமாளின் திருமேனியானது சாளக்கிராம கல்லினால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு:-

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ஸ்ரீ அஞ்சலி வரத விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஓர் ஆண்டு ஜலாதிவாசம்,  இரண்டு ஆண்டு தான்யாதிவாசம் செய்யப்பட்ட பிறகு, பெருமாளை எந்த ஊரில் பிரதிஷ்டை செய்வது என்ற கேள்வி எழுந்தது.

அப்போது, பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள் தன் திருவுள்ளம் கொண்டு கோயம்புத்தூர் மாநகரில் கொடிசியா பகுதியில் உள்ள திருப்பதி வேங்கடாசலபதி நகரில், வேங்கடாசலபதியாக எழுந்தருள விருப்பம் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சுபகிருது ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் நாள் வியாழக்கிழமை சுபமிகு ஸ்வாதி நட்சத்திரத்தில் செப்டம்பர் 1, 2022 ஆம் ஆண்டு திருப்பதி வேங்கடாசலபதி கோயம்புத்தூர் மாநகரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சிறப்பம்சம்:

இங்கு, திருமலா திருப்பதி கோயிலின் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமை போலவே வியாழக்கிழமையும் சிறப்பானது. வியாழக்கிழமைகளில் நேத்திர சேவை,  நிஜபாத சேவை, தோமாலை சேவை எனும் பூலங்கி சேவை நடைபெறும். மேலும், திருவோண நட்சத்திர தினத்தன்று,  பசும்பால், குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், நவ கலசம் கொண்டு விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது.

அந்நாளில் எம்பெருமாள் மஞ்சள், வெள்ளை, சிவப்பு போன்ற வண்ண மலர்களால் நேத்திர சேவை, நிஜ பாத சேவையில் காட்சியளிக்கிறார். மேலும், உலக நன்மைக்காக யாக பூஜை, மண்டபத்தில் பூப்பந்தல் அமைந்து 100 லிட்டர் பசும் பால் கொண்டு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும்.

அலங்கார ஆபரணங்கள்:

இங்கு, கிழக்கு திசையில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு அணிவிக்கப்படும் அலங்காரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆகாச ராஜ கிரீடம், பச்சைக் கற்பூர திருமண் காப்பு, கஸ்தூரி திலகம், நாடியில் பச்சைக் கற்பூரம், வலது கரத்தில் சுதர்சன சக்ரம், இடது கரத்தில் பாஞ்சன்யம், இடையில் தசாவதார ஒட்டியாணம், சூர்ய கடாரி, இரு தோளிலும் புஜகீர்த்தி, நாகாபரணம், வலது மார்பில் மகாலட்சுமி, இடது மார்பில் அலர்மேல் மங்கா தாயாருடன் துளசி பத்ர ஆரம், வில்வ ஆரம், ஸ்வர்ண தண்டை போன்ற ஆபரணங்களை அணிந்து, விஷேச புஷ்ப அலங்காரத்துடன், ஆண்டாள் மாலை சார்த்தி தங்கத் தாமரை மீது அழகாய் காட்சியளிக்கிறார்.

நைவேதனம் மற்றும் பிராத்தனை:

பெருமாளுக்குப் பிடித்தமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், தயிர் சாதம் போன்றவை படைக்கப்படுகின்றன.

கல்யாண உற்சவ சேவை, கருட சேவை, ஊஞ்சல் சேவை, சர்வ அலங்கார சேவை, தோமாலை சேவை, பச்சைக் கற்பூர திருமண் காப்பு சேவை, நூதன வஸ்திரம் சமர்ப்பணம், புஷ்ப அங்கி சேவை, வெண்ணெய் காப்பு சேவை, சந்தனக்காப்பு சேவை, அபிஷேக சேவை, இராஜ போக தளிகை நிவேதனம் சேவைகளைப் பெருமாளை வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். கூடுதலாக, திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றி வருகின்றனர்.

தரிசன நேரம்:

காலை 7:30 முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 முதல் 8:30 மணி வரையிலும் பெருமாளை தரிசிக்கலாம். சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் காலை 7:30 முதல் 12:00 வரை, மாலை 5:30 முதல் 9:00 மணி வரையில் நடை திறந்திருக்கும்.