மகாலிங்கம் கல்லூரி சார்பில் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி  மற்றும் அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணைந்து “அன்வேஷனா- அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி தமிழ்நாடு – 2024” எம்சிஇடி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

“அன்வேஷனா” என்பது பொறியியல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து கண்டுபிடிப்புகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் மாணவர்கள் வழிகாட்டிகளாகவும், பள்ளி மாணவர்கள் கற்றுக்கொள்பவர்களாகவும் பங்காற்றி வருகின்றனர். இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த ஆர்வத்தைத் தூண்டி, அவர்களின் அறிவியலைப் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது .

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப்  பொள்ளாச்சி  மாவட்ட கல்வி அலுவலர் கேசவ குமார், பெங்களூரு அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளை பொது மேலாளர் அரளகுப்பே நாகேஷ் ராமச்சந்திரா, அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளை  தமிழ்நாடு மண்டலம் மூத்த மேலாளர் டோபாஸ், பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் செயற்பொறியாளர் காஞ்சி துரை, விவிடிஎன் டெக்னாலஜிஸ்  இணை இயக்குநர் அருள் குமரேசன், கொங்கு பொறியியல் கல்லூரி மெக்கட்ரானிக்ஸ் துறை இணைப் பேராசிரியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூரு அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளை பொது மேலாளர் அரளகுப்பே நாகேஷ் ராமச்சந்திரா தனது சிறப்புரையில், அகஸ்தியா அறக்கட்டளையின் 25 ஆண்டுகால சேவையையும், படைப்பாற்றலில் ஆய்வுக்காக மாணவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளையானது பள்ளி மாணவர்களிடம் புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “குப்பம்” என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த அறக்கட்டளையில் 20 ஆய்வகங்கள் உள்ளன, அங்கு மாணவர்கள் ஆண்டு முழுவதும் வருகை தந்து பொறியியல் ஆர்வத்தை வளர்க்கின்றனர்.

மேலும், அவர் சர் சி.வி. இராமனின் நோபல் பரிசு பெற்றதை மேற்கோள் காட்டி புதிய கல்விக் கொள்கையின் மூலம் அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளையானது அனுபவப்பூர்வமான கற்றல் மற்றும் வடிவமைப்பு சிந்தனையை இளம் மாணவர்களிடையே தூண்டி  சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பெருமிதத்துடன் கூறினார்.

விவிடிஎன் டெக்னாலஜிஸ்  இணை இயக்குநர் அருள் குமரேசன் பேசுகையில் எம்சிஇடி மற்றும் அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் துறையில் அவர்களின் ஆர்வத்தை ஆராய வழி வகுத்து வருகிறது என்றார்.

தொடர்ந்து, பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் செயற் பொறியாளர் காஞ்சி துரை  பேசுகையில், 50 ஆண்டுகள் பழமையான பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் வரலாற்றையும், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பொறியியல் செயல்முறையின் பங்களிப்பை விவரித்து உரையாற்றினார்.

மேலும், அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளைகளையின் தமிழக பிரிவு மூத்த மேலாளர்  டோபஸ் தனது உரையில்,  கல்வியை உணர்ந்து கற்கும் போது அவர்களின் கற்றல் திறன் மேம்படுகிறது என்றார். சமூகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

இதில்  என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி, டீன்கள்  செந்தில்குமார், ராமகிருஷ்ணன், கேல்வின் சோபிஸ்டஸ் கிங், சின்னசாமி, பழனிகவுண்டர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கணேசன், பேராசிரியர்கள் மற்றும் 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.