நிபா வைரஸ்: கோவை எல்லையில் சோதனை தீவிரம் 

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை-கேரளா எல்லைப்பகுதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்த இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், மேலும் சிலருக்கு நோய் தொற்று உறுதியாக்கியிருப்பது அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதையடுத்து, தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, கோவை – கேரள எல்லைப் பகுதியான வாளையார் சோதனை சாவடியிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவிலிருந்து வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், கோவையில் எங்குச் செல்கின்றார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.