சுதந்திர தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தினை முன்னிட்டு சூலூர் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர்கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆசிக் அலி, ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்மோகன்ராஜ், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்த முகாம்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், விண்ணப்பங்கள் வழங்காமல் விடுபட்டவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவிதமாக ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகின்றவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே, அவர்களும் இம்முகாம்களில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இக்கூட்டத்தில் தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜஸ்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(கிராமம்), மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதிதிட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட 14 கூட்டப் பொருட்கள் நிறைவேற்றப்பட்டது என பேசினார்.

இக்கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுதல் உறுதிமொழியினை கலந்துகொண்ட அனைவரும் ஏற்றனர். பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் ஊராட்சி செயலர் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விளக்கினார். பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.