பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு 25 லட்சம் ரூபாய் அலங்காரம்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமையை ஒட்டி 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். மேலும் 208 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜையும் நடைபெற்றது.

ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமையில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து கோவை கவுண்டம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் ஓவ்வொரு வார ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு காய் கறிகள், பழங்கள், என ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றுவருகிறது.

அதன்படி வெள்ளிக்கிழமையன்று 2000 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர். மேலும் மாலைகளாகவும் தோரணங்களாகவும் ரூபாய் நோட்டுக்களை தொங்க விட்டிருந்தனர். இதற்காக இரவுநேரம் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 208 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் விளக்கேற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். 33 வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணன் விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு சில்வர் தட்டு, குங்குமச் சிமிழ் ஆகியவற்றை வழங்கினார்.