ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘சீனியர் செனாரியோ-2023’ என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரி தொடங்கிய காலம் முதல் தற்போது வரையுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்கள், கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிடும் வகையிலான புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதை பல ஆண்டுகள் முன்னர் படித்த முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்க பிரமாண்ட விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“இக்கல்லூரி தொடங்கி 36 ஆண்டுகளான நிலையில், உயர்கல்வியில் உயரம் தொட்டுள்ளது. இதில் முன்னாள் மாணவர்களின் பங்கு முக்கியமானது. நீங்கள் அனைவரும் இக்கல்லூரியின் தூதுவர்கள். இன்றைய மாணவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்பவர்கள். கல்லூரியின் நிலையான வளர்ச்சிக்கான அச்சாணிகள்.

இக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், நிர்வாகம் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன. வர்த்தக வாய்ப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

உங்களுடைய அனுபவங்கள், வழிகாட்டுதல்களை மாணவர் சமுதாயத்திற்கு அளியுங்கள். இது அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உதவும். வாழ்நாள் முழுவதுமான உங்களுடைய ஒத்துழைப்பு இக்கல்லூரி எதிர்நோக்கி காத்திருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் ஆர்.பிரபு, செயலர் ஜி.செந்தில்குமார் உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.