ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய கீதம் பாடும் போட்டி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிலாடெலி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய கீதப் பாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். தொழில்நுட்பம் பெருகியுள்ள தற்காலத்தில் தேசியகீதத்தை வாய்பாட்டாகப் பாடும் வழக்கம் தற்போது குறைந்துள்ளது. அந்நிலையில் நம் இந்திய நாட்டின் தனிச்சிறப்புகளுள் முக்கியமான ஒன்றான தேசியகீதத்தை நல்ல உச்சரிப்போடும், உணர்வோடும், இசையோடும் முறையாகப் பாடும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இளம் தலைமுறையினரிடையே தேசியகீதம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவர்களிடையே இப்போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் கலந்துகொண்ட பல்வேறு பள்ளி மாணவா்கள் தேசிய கீதத்தை முறையாக பாடியதோடு இசைக் கருவிகளோடு பாடி பாராட்டுக்களைப் பெற்றனா். இப்போட்டியில் கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 25 பள்ளிகளைச் சார்ந்த 175 மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தேசியப் பெருமையோடு அமைந்த இப்போட்டியில் கோவை சி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், கோவை சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், கோவை ஸ்ரீ சௌடேஷ்வரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.

விழாவின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரியின் முதல்வர் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், இப்போட்டியினைப் பிலாடெலிக் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் சஜிதா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.