டெலிகிராம் வாயிலாக 22 லட்சம் மோசடி மர்ம கும்பலுக்கு வலை!

சமூக வலைதள செயலியான ‘டெலிகிராம்’ குழு வாயிலாக பெண்ணிடம், 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் லத்திகா லட்சுமி, 29. வீட்டிலிருந்தபடி, ‘ஆன்லைன் டிரேடிங்’ செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன், அவரது, ‘வாட்ஸாப்’ எண்ணுக்கு வந்த தகவலில், பகுதி நேர வேலையாக, ‘யூ டியூப்’ வீடியோக்களை ‘லைக்’ செய்வதன் வாயிலாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த டெலிகிராம் செயலியின் குழுவின் இணைந்த லத்திகாலட்சுமி, சிறிய அளவில் முதலீடு செய்து, பணிகளை செய்து வந்தார்.

இதில், அவருக்கு, 4,000 ரூபாய் லாபம் கிடைத்தது. தொடர்ந்து, லத்திகா லட்சுமி பல்வேறு தவணைகளாக, 22 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதன் பின் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லத்திகா லட்சுமி, மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.