கொங்குநாடு கல்லூரியில் ஆண்டு விழா

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமையன்று அன்று காலை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் வி.காமகோடி சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் பொருளாளர் மருத்துவர் ஓ.என்.பரமசிவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் லச்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்குச் சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

பின்னர் சிறப்பு விருந்தினர் பேசுகையில்”நம் பாரத நாட்டின் பண்பாட்டை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், நம் நாட்டில் ஏற்படுகின்ற நன்மை உலகத்துக்கே நன்மையாக முடியும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டன என்றும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு இணங்க நம் நாடு இன்று முன்னேறி வருகிறது என்றும் கூறினார்.

குறிப்பாக, ஓர் துன்பம் நேரும்போது அதை எதிர்கொள்ளக்கூடிய அறிவு வெளிப்படும். அதுபோல இந்திய மக்களின் அறிவைப் பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. 21 நாட்களில் அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கிய சேது என்ற செயலியை வடிவமைத்தனர். அந்த செயலியால் சுமார் 20கோடி இந்தியர்கள் பயன் பெற்றனர் என்றும் குறிப்பிட்டார். இன்றைக்கு வல்லரசு நாடுகளின் வங்கிகளே திவாலாகிக் கொண்டிருக்கிற சூழலில் இந்திய வங்கிகள் நிலைத்த வளர்ச்சியுடன் உள்ளன.

வருகிற 2047 ஆம் ஆண்டு பாரதம் நூறாவது சுதந்திர நாளைக் கொண்டாட உள்ளது, ஆகையால் அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு முக்கியமானவை என்றும் அவர் கூறினார். இளைஞர்கள் மிகுதியாக உள்ள நம் நாட்டில் பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை வளப்படுத்துகின்ற கல்வி முறை அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், தகவல் அறிவியல் துறையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அது நமக்குப் புதியதல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வானியல் குறித்த தகவலை அறிய பஞ்சாங்கம் பார்க்கும் அறிவு நம் முன்னோர்களுக்கு இருந்தது என்றும் அந்த அறிவின் தொடர்ச்சி நம் ஒவ்வொருவருடைய மரபணுவிலும் உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

விழாவின் நிறைவில் மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.