10,000 ஆக உயர்ந்து காலிப்பணியிடங்கள்

உற்சாகத்தில் குரூப் 4 தேர்வர்கள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளதால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 18.5 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், இன்று வரை வெளியிடப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான திருத்தி அமைக்கப்பட்ட காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வி.ஏ.ஓ காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை 274-ல் இருந்து 425 ஆக உயர்ந்துள்ளது. இளநிலை உதவியாளருக்கான காலிப்பணியிடங்கள் 4,952 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஜூனியர் இன்ஜினியர், பில் கலெக்டர் ஆகியவற்றிற்கான காலிப்பணியிடங்கள் 163-ல் இருந்து 252 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எண்ணிக்கை 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.