சித்திரை சாவடி பாசன வாய்க்காலில் உள்ள கழிவு நீர் அகற்றக் கோரி விவசாயிகள் கோரிக்கை

சித்திர சாவடி பாசன வாய்க்காலில் கழிவு நீர் பைப் லைன்களை அகற்றக்கோரி விவசாயிகள் கோரிக்கை

கோவை, ஏப்.28 கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாலு, கந்தா, சின்னசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, சித்திரைச் சாவடி பாசன வாய்க்காலில் 24 – 25 மதகுகளுக்கு இடையே பெரிய பள்ளத்தில் மழை நீர் வாய்க்காலில் கலந்து சேதாரம் ஏற்படாமல் இருக்க வெள்ள நீர் நொய்யல் ஆற்றிற்கு சென்று கலக்கும் வகையில் உயர்மட்ட பாலம் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்று வரை உபயோகத்தில் உள்ளது.

கடந்த ஏப்ரல் 2022 ல் மேற்படி பாலத்தில் மேற்பகுதியில் இயந்திரத்தைக் கொண்டு இரண்டு துளைகள் அமைக்கப்பட்டு பள்ளத்தில் வரும் கழிவு நீர் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டது. புகாரின் அடிப்படையில் அதே மாதத்தில் அன்று பொதுப்பணித்துறை காங்கிரட் கலவை கொண்டு அவைகளை அடைத்து விட்டனர்.
மேற்படி பாலத்தின் கரையில் 2022 ஜூன் மாதம் மேற்கு பாலத்தில் வடபுறம் அலை கற்ளை அகற்றி கரையை உடைத்து பி.வி.சி குழாய் அமைத்து மீண்டும் கழிவுநீர் பாசன வாய்க்காலில் திருப்பி விடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் 2022 டிசம்பர் மாதம் கழிவுநீர் செல்லும் பி.வி.சி குழாயை அடைத்துவிட்டார். ஞானசுந்தரம் என்பவர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மீது, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் குழாய் அடைப்பை நீக்கி மீண்டும் கழிவுநீர் பாசன வாய்க்காலில் திருப்பி விட்டுவிட்டார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த விடாமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் செயல்படுகின்றனர். பிரச்சனையை திசை திருப்பி குற்றவியல் நடைமுறை சட்டம் செக்சன் 133இன் படி நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகின்றனர்.
உயர்மட்ட பாலத்தை கடந்து செல்லும் நீர்வழி பாதை ஆரம்பத்தில் 80 அடியும் ஆற்றுக்கும் செல்லும் வழியில் குறைந்த பட்சம் 30 அடி அகலமும் கொண்டு சுமார் 6.70 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. ஆனால், தற்சமயம் 12 அடி அகல தடம் போக மற்ற அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு மாவட்ட நிர்வாகம் பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை அனுமதிப்பதுடன் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது விவசாயிகள் சின்னதுரை, கோகுல கிருஷ்ணன், கார்த்திகேயன், நடராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.