சச்சிதானந்த பள்ளியில் ‘ஆற்றல் மன்றம்’ துவக்கம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் மேட்டுப்பாளையம், செயற்பொறியாளர் சத்தியா, உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மின் பகிர்மானம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது பற்றியும், நாம் மின்சாரத்தை எந்தெந்த வகைகளில் எல்லாம் சேமிக்கலாம் என்பது பற்றியும் சத்தியா எடுத்துரைத்தார். அத்துடன், பள்ளி மாணவர்கள் மின்சார சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளும் வகையில், ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மின்சார சேமிப்பு பற்றிய செயல் விளக்கங்களை அளித்தனர்.

பள்ளிச் செயலர் கவிதாசன் தனது தலைமையுரையில், சேமிப்புகளில் தற்காலத்தில் தலையாய ஒன்றாகத் திகழ்வது மின்சார சேமிப்பு ஆகும். மாணவர்கள் மின்சார சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் தேவையற்ற மின் விளக்குகளை மின் விசிறிகளை அணைத்தல், தேவைக்குத் தகுந்தாற்போல மின்சாரத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களின் வழியாக மின் சேமிப்பிற்கான பங்களிப்பினை அளித்தல் வேண்டும். இன்றைய மின் சேமிப்பு நாளைய ஒளிமயமான உலகத்திற்கு வழி என்று பேசினார்.

இயற்பியல் துறை ஆசிரியர் முத்துக்குமார், மின் சேமிப்பு பற்றிய உறுதிமொழியை வாசிக்க அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், துணைமுதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மின்சாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.