நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கி மாணவர்கள் காந்தி ஜெயந்தியை கொண்டாடினர்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலர் கவிதாசன்,  கல்வி ஆலோசகர் கணேசன், மற்றும் துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்து  காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி சிறப்பித்தனர்.

 

விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காந்தியடிகளை போற்றி பேசியதோடு லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் குறித்தும், காமராசர் நினைவுநாள் குறித்தும் உரையாற்றியது சிறப்பாக அமைந்தது.

பள்ளிச் செயலர் கவிதாசன் தனது சிறப்புரையில், “மகாத்மா, உலகம் போற்றுகின்ற மாமனிதராக, எளிமையின் உருவமாக வாழ்ந்தவர். ஒழுக்கத்துடனும் பண்பாட்டுடனும் வாழ தவர்க்க வேண்டிய ஏழு பாவங்களைப் பற்றி காந்தியடிகள் கூறியுள்ளார். அதனை பின்பற்றி மகிழ்வான வாழ்வை வாழவேண்டும். அகிம்சை முறையில் வாழ்ந்து நம் நாட்டை உயர்த்துவதே மாணவர்களின் கடமையாகும்” என்றார்.

விழாவின் ஒரு பகுதியாக பள்ளியின் ‘தேசப்பற்று மன்ற’ மாணவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து, பழங்கள் மற்றும் பிஸ்கட் வழங்கி காந்தி ஜெயந்தியை கொண்டாடினர்.